பூதப்பாண்டியன்
பூதப்பாண்டியன்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் :
★ பூதப்பாண்டியன் என்பவன் சங்க காலத்துப் பாண்டிய அரசர்களுள் ஒருவன்.
★ இவன் குறுநில மன்னர்களுடன் நட்பாக இருந்தவன் எனப்படுகிறது.
★ இவன் ஒல்லையூர் என்னும் ஊரை வென்றதாலோ அல்லது வேறு தொடர்பாலோ ஒல்லையூர் தந்த என்னும் அடைமொழி கொண்டவன்.
★ இவனுடைய மனைவி கோப்பெருங்கோப்பெண்டு என்னும் நல்லாள், இவன் இறந்தவுடன் உயிர்நீத்தாள். அரசியார் கோப்பெருங் கோப்பெண்டு அவர்களைப் பற்றி இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.
★ இப்பாடல்களை சங்கப் புலவர்கள் அரிசில் கிழார் அவர்களும், பெருங்குன்றூர் கிழார் அவர்களும் பாடியுள்ளனர்.
புறநானூறு (246-247)
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் :
★ பாண்டியரின் வடஎல்லை ஒல்லையூர் நாடு. (இன்றைய புதுக்கோட்டையிலுள்ள ஒலியமங்கலம்) அதனை சோழர் கைப்பற்றுகின்றனர்.பூதப்பாண்டியன் அதனை போரிட்டு வென்றான். ஆகவே "ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்" எனும் பெயரினை பெற்றான்.
★ இவன் பெயரில் இன்றும் நாஞ்சில் பகுதியில் "பூதப்பாண்டி" எனும் பெயரில் ஊர் உள்ளது.
★ இத்தகைய சிறப்புள்ள இம்மன்னன் ஒருநாள் இறக்கிறான்.இவனது மனைவி பெருங்கோப்பெண்டு. இவள் அரசியல் மாண்பறிந்தவள். கணவன் இறந்தவுடன் தீப்புக எண்ணுகிறாள். சுற்றத்தார் இவளை விடவில்லை. அரசன் இல்லா குறைநீங்க அரசாள வருமாறு கூற, அக்கூற்றினை ஏற்க மறுக்கிறாள்.
★ தீப்புகாவண்ணம் தடுக்கும் சான்றோரை சினத்துடன் உரைக்கிறாள்.
அதுவே இப்பாடல்.
"பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கென செல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச்சூழ்ச்சி பல்சான்றீரே
அணில்வரி கொடுங்காய் வாள்போழ் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது
...........................
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே"
பொருள்:
சான்றோரே! நீங்கள் தீப்புகாது தடுக்கின்றனர். ஒருவேளை தீப்புகுதல் அரிது என எண்ணுகிறீர்போலும். எனக்கு குளிர்ந்த தாமரைபொய்கையும், ஈமத்தீயும் ஒன்றே!
(மேலும் இங்கு கைம்பெண்மகளிர் மேற்கொள்ளும் நோண்பினையும் கூறுகிறது! )
வெள்ளரிவிதைபோன்ற நல்லமணம் உடைய நெய்யினை கைம்மைமகளிர் உணவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்.நீர்ச்சோற்றை வேளைக்கீரையுடனே உண்பர். பருக்கைககல் பரப்பப்பட்ட படுக்கையில் பாய்இன்றி உறங்குவர்.
இப்படுக்கைக்கு பிணப்படுக்கையே மேல். என கூறி தீப்புகுந்தாள்.
முதன்முதலாக சதியேற்றம் குறித்து வரும் தகவல் இது. இவ்வழக்கம் பின்னர் பிற்கால சோழர் காலத்திலும் தொடர்ந்து, நாயக்கர் காலம்வரை நீண்டு இருந்தது. இத்தகைய சதிக்கற்கள் நிறைய உண்டு.சில இடங்களில்"தீப்பாய்ந்தம்மன்" என்று வழிபாட்டிலும் உள்ளது.
Comments
Post a Comment